திருட்டில் ஒவ்வொன்றும் ஒருவிதம், அதில் திருடர்கள் புதுவிதம்! நந்தா பட பாணியில், சென்னை அம்பத்தூரில் திருடச் சென்ற வீட்டில் டி.வி பார்த்துள்ளார், சிட்லபாக்கத்தைச் சேர்ந்த டில்லிபாபு. டி.வி சத்தம், லைட் வெளிச்சத்தால் அவர், ரோந்து போலீஸிடம் சிக்கியுள்ளார்.சென்னை அம்பத்தூர், விஜயலட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம். இவரது சொந்த ஊர் காரைக்குடி. பொங்கல் பண்டிகையைக் கொண்டாட குடும்பத்தோடு சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார். வீட்டில் ஆளில்லாத விவரத்தை அம்பத்தூர் போலீஸிடம் தெரிவித்திருந்தார் ஆதிமூலம். இதனால், ரோந்துப்பணிக்குச்செல்லும் போலீஸாரிடம் ஆதிமூலம் வீட்டையும் கூடுதலாகக் கண்காணிக்கும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கடந்த 14-ம் தேதி ரோந்துச் சென்ற போலீஸார், ஆதிமூலம் வீட்டில் லைட் எரிவதைக் கண்டு அ  தி ர் ச்  சி யடைந்தனர். மேலும், வீட்டுக்குள்ளே இருந்து டி.வி சத்தமும் கேட்டது.

உடனடியாக ரோந்து போலீஸார் அந்த வீட்டின் முன்பக்கக் கதவைப் பார்த்தனர். அப்போது, கதவில் பூட்டு தொங்கிக்கொண்டிருந்தது. போலீஸார், பின்பக்க வழியாகச் சென்று பார்த்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உடனே, சுதாரித்த போலீஸார், திருடனை மடக்கிப் பிடிக்கத் திட்டமிட்டனர். வீட்டைச் சுற்றி போலீஸார் நிறுத்தப்பட்டனர். அதிரடியாக, பின்பக்கம் வழியாக போலீஸார் உள்ளே நுழைந்தனர். அப்போது, ஹாலில் ஒருவர் டி.வி பார்த்துக்கொண்டிருந்தார். போலீஸாரைப் பார்த்ததும் அவர் ஓட்டம்பிடிக்க முயன்றார். அவரை மடக்கிப் பிடித்து விசாரித்தபோது, அவரது பெயர் டில்லி பாபு, சிட்லபாக்கத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும், அவன் பிரபல கொள்ளையன் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, டில்லி பாபுவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். இந்தத் தகவல், சொந்த ஊரிலிருக்கும் ஆதிமூலத்துக்கு தெரிவிக்கப்பட்டது. போலீஸாருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்ததால் கொள்ளை நடக்கவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “டில்லிபாபு மீது 20-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. திருட்டு வழக்கில் கைதாகிய டில்லிபாபு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த நவம்பர் மாதம்தான் சிறையிலிருந்து வெளியில் வந்தார்.

மேலும், திருடச்செல்லும் வீடுகளில், பின்பக்கக் கதவை உடைத்துதான் கைவரிசை காட்டுவார். அதனால், ‘பேக் டோர்’ டில்லிபாபு என்றே போலீஸ் க்ரைம் கிஸ்ட்ரியில் குறிப்பிட்டுள்ளோம். சென்னையில், பின்பக்க கதவு உடைத்து திருட்டு சம்பவங்கள் நடந்திருந்தால் போலீஸ் தேடுதல் பட்டியலில் டில்லிபாபுவின் பெயரும் இடம்பிடித்திருக்கும். பின்பக்கக் கதவை உடைத்துத் திருடுவதுகுறித்து டில்லிபாபுவிடம் போலீஸார் விசாரித்தபோது, அவர் சொன்ன பதில் எங்களுக்கே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ‘முன்பக்கத்தில் உள்ள கதவின் பூட்டுகள் உறுதியாக இருக்கும்.

பெரும்பாலான வீடுகளில் பின்பக்கக் கதவுகளின் பூட்டுகள் பலவீனமாகவே இருக்கும். மேலும், பின்பக்க வழியாக நுழைந்தால், அக்கம்பக்கத்தினரின் கண்களில் சிக்க வாய்ப்பில்லை. என்பதாலேயே பின்பக்கக் கதவை உடைத்துத் திருடுவேன்’ என்று தெரிவித்துள்ளார். சிறையிலிருந்து வெளியில் வந்த டில்லிபாபு, வேறு எங்கும் கைவரிசை காட்டினாரா என்று விசாரித்துவருகிறோம்” என்றனர்.நந்தா திரைப்படத்தில் லொடுக்கு பாண்டி கதாபாத்திரத்தில் நடிகர் கருணாஸ் நடித்திருப்பார். அவர் திருடச்செல்லும் வீட்டில் டி.வி பார்ப்பதுபோல காட்சி அமைந்திருக்கும். அதுபோலத்தான் டில்லிபாபுவும் பொங்கல் தினத்தன்று ஆதிமூலம் வீட்டில் திருடச் சென்றுள்ளார்.

அப்போது, அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் ஆள்நடமாட்டம் இருந்துள்ளது. இதனால், பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் தூங்கிய பிறகு கொள்ளையடிக்கலாம் என்று டில்லிபாபு முடிவுசெய்துள்ளார். அதுவரை என்ன செய்யலாம் என்று நினைத்த டில்லிபாபு, ஹாலிலிருந்த டி.வி-யை ஆன்செய்து, பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளைப் பார்த்துள்ளார். ஆனால் டி.வி சத்தம், லைட் வெளிச்சத்தால் போலீஸாரிடம் சிக்கிவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here